தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தலை இயன்றளவு விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேவையான சட்டங்களை பரிசீலித்து தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு தனது பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் விரும்புவதாக மீண்டும் வலியுறுத்தினார்.
“மாகாண சபைகளினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல திட்டங்கள் உள்ளன. தற்போது மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும், அவரது கருத்து மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல என வலியுறுத்திய அமைச்சர், அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த செயல்முறை முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய செயற்பாடு தொடர்பில் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் காணப்படுவதாகவும், தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அனைத்து தரப்பினரின் கவலைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு, ஆகஸ்ட் 26 (டெய்லி மிரர்):
