போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;
இன்னும் தீர்வில்லை!
உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும் !!
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!
( வி.ரி. சகாதேவராஜா)

யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 பேர் மரணித்திருக்கின்றார்கள். ஜனாதிபதிகள் மாறி மாறி வந்தபோதிலும் இழப்பிற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.எனவேதான் சர்வதேச பொறிமுறையை வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை பகல் அம்பாறை மாவட்டம் காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார் .

இந்த ஊடகச் சந்திப்பு காரைதீவு பிரதேச சபையின் நூலக மேல் மாடியில் இன்று நடைபெற்றது.

அச்சமயம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரன், முன்னாள் தவிசாளர் கே. ஜெயசிறில், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், சங்க ஆலோசகர் ரி.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கே செல்வராணி மேலும் பேசுகையில்..

எமது உறவுகளை வலிந்து காணாமலாக்கச் செய்தது இந்த ஸ்ரீலங்கா அரசாங்கமே .
உலகில் காணாமல் ஆக்கப்பட்டோர் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. போகிற போக்கில் முதலாம் இடத்திற்கு வரலாம்
.செம்மணி போன்ற பல புதைகுழிகள் தோண்டப்படும் பொழுது இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்மை ஒரு உள்ளக பொறிமுறைக்கு தள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது.
அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே தான் சர்வதேச பொறிமுறையை நாங்கள் வேண்டி இருக்கின்றோம்.

எதிர்வரும் 30ஆம் தேதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினம் .
அன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இடம்பெற இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருந்தும் அங்கு பலாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூட இருக்கின்றார்கள். இங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் 600 தாய்மார்கள் இறந்தமை வரலாற்று நூல் வெளியிடப்பட இருக்கிறது .மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பாவித்த அரிய பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறது .
எனவே அனைத்து தரப்பினரையும் இந்த சர்வதேச மாநாட்டுக்காக அழைக்கின்றோம். என்றார்.