(செல்வி வினாயகமூர்த்தி )

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திட்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 23.08.2026 முதல் 09.09.2026 வரை பல்வேறு சமய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக இன்று (23) மண்டபம் காவல் பண்ணும் நிகழ்வு இடம்பெறுவதுடன், முனையூர் வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து அம்மன் எழுந்தருளச் செய்யப்பட்டு ஆலயத்திற்கு அழைத்து வரப்படவுள்ளார்.

24ஆம் திகதி அம்மன் திருக்கதவு திறக்கப்பட்டு பஞ்சவர்ணக் கொடி ஏற்றப்படவுள்ளதுடன், அம்மன் பூஜையைத் தொடர்ந்து இரவுப் பூஜையில் அம்மன் கும்பத்தில் எழுந்தருளி உள்வீதி உலா வரவுள்ளார்.

25ஆம் திகதி காலை பூஜை, மடை எடுத்தல் மற்றும் கொளுவிருத்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், இரவு தம்பிலுவில் முதலாம் பகுதி மக்கள் ஊர்க்காவல் பண்ணும் நிகழ்வும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவுப் பூஜை நடைபெற்று அம்மன் உள்வீதி உலா வரவுள்ளார். 26ஆம் திகதி காலை பூஜையைத் தொடர்ந்து மடை எடுத்தலும் அபிஷேகமும் இடம்பெறுவதுடன், தம்பிலுவில் இரண்டாம் பகுதி மக்கள் ஊர்க்காவல் பண்ணும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து இரவுப் பூஜை, குங்கும அர்ச்சனை மற்றும் அம்மன் உள்வீதி உலா இடம்பெறவுள்ளது.

27ஆம் திகதி காலை பூஜை, மடை எடுத்தல் மற்றும் அபிஷேகம் இடம்பெறுவதுடன், தம்பிலுவில் மூன்றாம் பகுதி மக்கள் ஊர்க்காவல் பண்ணும் நிகழ்வும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவுப் பூஜை, குங்கும அர்ச்சனை மற்றும் அம்மன் உள்வீதி உலா இடம்பெறவுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பாற்குட பவனி 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் காலை பூஜையைத் தொடர்ந்து முனையூர் வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து அம்மனுக்கு பாற்குட பவனி நடைபெறுவதுடன், பாற்குட பவனியைத் தொடர்ந்து அம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம்பெறும். மேலும், முனையூர் முதலாம் பிரிவு மக்களின் ஊர்க்காவல் பண்ணும் நிகழ்வும், குங்கும அர்ச்சனை மற்றும் அம்மன் உள்வீதி வலம் வருதலும் நடைபெறவுள்ளன.

29ஆம் திகதி காலை பூஜை மற்றும் மடை எடுத்தல் இடம்பெறுவதுடன், முனையூர் இரண்டாம் பிரிவு மக்களின் இரவு ஊர்க்காவல் பண்ணும் நிகழ்வும் நடைபெறும். தொடர்ந்து குங்கும அர்ச்சனை இடம்பெற்று அம்மன் உள்வீதி வலம் வரவுள்ளார்.

30ஆம் திகதி காலை பூஜையைத் தொடர்ந்து வீரகம்பம் வெட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், மடை எடுத்தல், அபிஷேகம் மற்றும் இரவு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து குங்கும அர்ச்சனையுடன் அம்மன் கும்பத்தில் எழுந்தருளி உள்வீதி வலம் வரவுள்ளார். அன்றைய தினம் முனையூர் வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திலும் விசேட எழுந்தருள்பண்ணுதல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

31ஆம் திகதி காலை பூஜை, மடை எடுத்தல் மற்றும் விசேட அபிஷேகம் இடம்பெறவுள்ளதுடன், அம்மன் உள்வீதி வலம் வருதல் மற்றும் வழமையான பாதையின் ஊடாக முத்துச் சப்பர பவனி சிறப்பாக நடைபெறவுள்ளது.

செப்டெம்பர் 1ஆம் திகதி நோர்ப்பு நெல் எடுத்து வருதல், மகா சக்தி யாக பூஜைகள், நோர்ப்பு கட்டுதல் மற்றும் கடல் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், தீமிதிப்பிற்கான நூல் கட்டுதல் மற்றும் தீ வளர்க்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

செப்டெம்பர் 2ஆம் திகதி அதிகாலை தீமிதித்தல், ஆயுத பூஜை மற்றும் வாழி பாடுதல் ஆகிய முக்கிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து செப்டெம்பர் 9ஆம் திகதி அதிகாலை பால் பொங்கல் பூசை இடம்பெறுவதுடன் இரவு வைரவர் பூஜையுடன் எட்டாம் சடங்கு இனிதே நிறைவுபெறவுள்ளது.

பல்வேறு சமய அனுஷ்டானங்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ள வருடாந்த அலங்கார சக்தி விழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

விழா நிகழ்வுகள் உற்சவகால பிரதமகுரு செ. சற்குணராசா குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.