சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரம்: நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையே அமுலில் இருக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதுவரையில், நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புணர்வுடனும் சிறந்த முறையிலும் செயற்பட வேண்டிய கடமை கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களிலும் வெளிப்புறங்களிலும் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மூவின மக்களும் வாழ்ந்து வருவதால், அனைத்து இன மக்களின் கலாசாரங்களையும் மதித்து நாட்டின் நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் சிலர் இனவாதத்தை பயன்படுத்தியதாகவும், தேசிய மக்கள் சக்தி இனவாத அரசியலை தோற்கடித்தே ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகள் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய சீருடை விவகாரத்தையும் இனவாத நோக்கில் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
அரச சேவையில் ஆடை ஒழுங்குமுறை காணப்படுவதுடன், சுகாதார சேவையாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதே எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் சுகாதார சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு சீருடைக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் சீருடையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இனவாத நோக்கங்களைக் கொண்ட தரப்பினரின் முயற்சிகளை முறியடிப்பதற்கும் புதிய கனிஷ்ட உத்தியோகத்தர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கை சுகாதார சேவையில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக தீர்வு பிரச்சினையை சமாளிக்க உதவும் எனவும், எதிர்காலத்தில் அனைத்து தரப்பினருடனும் இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வொன்றை காண வேண்டும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை இனவாத முரண்பாடாக மாற்றியமைக்க சில தரப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எந்தவிதத்திலும் இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
