சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. இதனால் பல்வேறு வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
