பௌத்த மதத்துடன் இலங்கைக்கு கிடைத்த நாகரிக சமூகத்தின் உயரிய பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒழுக்கமும் நற்பெறுமானங்களும் நிறைந்த நவீன தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் தேரவாத பௌத்த பாரம்பரியம் நாட்டில் வேரூன்றியதுடன், அது மத வளர்ச்சியை மட்டுமன்றி கல்வி, கலாசாரம், கட்டிடக்கலை, நீர்ப்பாசனம், சிற்பக்கலை உள்ளிட்ட பல துறைகளிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தலைமுறையினர் அந்தப் பெருமைமிக்க பாரம்பரியத்தின் வாரிசுகளாக, சமூகத்தில் சிதைந்து வரும் ஒழுக்க விழுமியங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் மீட்டெடுத்து, நாகரிகம் நிறைந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாராளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்வதாகவும், நெறிமுறையற்ற ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இறுதியாக, கருணை, இரக்கம், ஞானம் ஆகிய உயரிய பண்புகள் அனைவரது வாழ்விலும் மலர வேண்டும் எனப் பிரார்த்தித்து, அனைத்து மக்களுக்கும் தனது பொசன் தின வாழ்த்துகளை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

