மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதல் மூன்றாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ‘மொம்பாசா’ மற்றும் ‘அல் பஹியா’ ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஆறு இந்தியர்களும் இரண்டு உக்ரைனியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் நால்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் விளைவாக இரண்டு எண்ணெய் கப்பல்களிலும் தீ விபத்து ஏற்பட்ட போதிலும், பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், நாட்டின் இறையாண்மையையும் கடல்சார் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தங்களுக்கு முழு உரிமை இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய இராணுவத் தளங்கள் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களால் புஷெஹ்ர், சபஹார் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தளம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தொடர் மோதல் மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையும் கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை பதிவு செய்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக இருப்பதால், அங்கு நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

