100 ஆண்டுகளுக்கும் மேலான பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு!
வெருகலம்பதி ஆலயத்தில் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” திறப்பு.
திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” அமைக்கப்பட்டு (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, குமார் ஜெயக்குமார் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடைமுறை வடிவம் கொடுத்துள்ளனர்.
சுமார் 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு”, பக்தர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் ஆலயத்தின் எதிர்காலத் தேவைகளை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
குமார் ஜெயக்குமார் மற்றும் குழுவினரின் முன்முயற்சியின் பயனால் தொழிலதிபர், சமூக வேவையாளர் குமார் ஜெயக்குமார் MBA, BSc (Hons) அவர்களினாலும், அவரது குழுவினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் பரா சந்திரசேகரம், சஞ்சீவன் ஸ்ரீகாந்தன், திசையகுமார் பரமேஸ்வதி ஆகியோரும் இணைந்து பங்களிப்பு வழங்கினர்.
நீண்டகாலமாக நிலவி வந்த பொதுமக்களின் தேவையை கருத்திற்கொண்டு, ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி இந்தப் பணியை முன்னெடுத்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெருகலம்பதி ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தீர்த்தம் தொடர்பான ஆன்மிகச் சடங்குகளை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பான மற்றும் முறையான வசதி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக, கங்கை தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
இந்தத் தேவையை கருத்திற்கொண்டு, குமார் ஜெயக்குமார் மற்றும் அவரது குழுவினர் தாமாக முன்வந்து, எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புமின்றி பொதுமக்களின் நலனுக்காக இந்தப் பணியை முன்னெடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த குமார் ஜெயக்குமார்,
கங்கை தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல. 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களாலும் பக்தர்களாலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு தேவையாகும். இந்த நீண்டகாலத் தேவையை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய பங்களிப்பையாவது நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நானும் எனது குழுவினரும் முன்வந்தோம்.
இந்தப் பணியின் நோக்கம் எந்தவொரு தனிநபருக்கும் புகழ் தேடுவதோ, அரசியல் அல்லது வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ அல்ல. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதும், பக்தர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்துவதும், ஆலயத்தின் புனிதத்தன்மை மற்றும் சிறப்பை மேம்படுத்துவதுமே எங்களுடைய நோக்கமாகும்.
அத்துடன், ஆலயத்தின் நீண்டகால தேவைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்த வசதி, பொதுமக்களின் பயன்பாடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் ஆலயத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
ஆலயம் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ சொந்தமானது அல்ல. அது மக்களின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு அடையாளத்துடன் தொடர்புடைய புனிதத் தலம். எனவே, ஆலயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என்றார்.











