ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64 அப்பாச்சி ஹெலிகொப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த “நியாயமற்ற ஈரானிய தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தகவலின்படி, நேற்று (09) மாலை 17:00 EST (BST இரவு 22:00) மணியளவில் இந்த இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. “ஈரானின் அத்துமீறலுக்கு அளிக்கப்பட்ட தகுந்த மற்றும் சமநிலையான பதிலடியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஓமன் கடற்பரப்பில் ரோந்துப் பணியில் இருந்த அமெரிக்க அப்பாச்சி ஹெலிகொப்டர், ஈரானிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்றின் தாக்குதலால் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அந்த ட்ரோன் திட்டமிட்டு ஹெலிகொப்டரைத் தாக்கியதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஹெலிகொப்டர் கடலில் விழுந்ததைத் தொடர்ந்து, அதில் பயணித்திருந்த இரண்டு அமெரிக்க விமானிகளும் அமெரிக்காவின் அதிநவீன கடல் ட்ரோன் உதவியுடன் இரண்டு மணி நேரத்திற்குள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு, அதற்கான இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.