ஈரான் மீது இஸ்ரேலின் பாரிய வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!
ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பின்னர் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்று (08) பாரிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் தலைநகர் டெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் இந்த வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சவூதி அரேபியாவில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள முக்கிய இராணுவத் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு விடுத்திருந்த எச்சரிக்கையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலைமையால் மத்திய கிழக்கு முழுவதும் மீண்டும் ஒரு விரிவான போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளதுடன், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் அதிகரித்துள்ளன.
