–
✍️அஸ்லம் எஸ்.மௌலானா
முன்னாள் வர்த்தக, வாணிப மற்றும் கப்பல்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் தொடர்பாக அன்னாரது அரசியல் மற்றும் கல்வித்துறைசார் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்ட நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இது.
இன்று அன்னாரது 09 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இத்தொகுப்பு பதிவேற்றப்படுகிறது.
தொகுப்பு: அஸ்லம் எஸ்.மௌலானா
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, யாழ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக, அமைச்சரவை அமைச்சராக என்று சுமார் கால் நூற்றாண்டு காலம் கல்முனை தொகுதியையும் இலங்கை பாராளுமன்றத்தையும் தன் அறநெறிகளாலும், தூய்மையான சேவைகளாலும், அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும், தியாகத்தாலும், தீட்சண்ணியத்தாலும் அலங்கரித்த மாமனிதர் கலாநிதி சட்டத்தரணி மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கல்முனை தொகுதியில் ஐ.தே.க.வின் அபேட்சகராக முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் களமிறக்கப்பட்ட மன்சூர், 955 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற போதிலும் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் அபேட்சகராக போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார்.
இதனைத் தொடர்ந்து இவரினால் ஆயிரக்கணக்கானோருக்கு அரச தொழில் வழங்கப்பட்டது. தனது தொகுதிக்கு வெளியிலும் கூட கோட்டாக்கள், மீன்பிடி படகுகள் வழங்கி ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்.
கல்வியா? கமத்தொழிலா? கடற்றொழிலா? வர்த்தகமா? வைத்தியமா? வீடா? வேறேதுமா? அத்தனை துறையிலும் மன்சூரின் பதவிக் காலத்தில் கல்முனை உச்ச பயன்களை பெற்றுக் கொண்டது.
அத்துடன் கல்முனை தொகுதியிலுள்ள அனைத்து கிராமங்களிலும் புதிய பாடசாலைகள், பொது நூலகங்கள், வகுப்பறை மண்டபங்கள், பொது கட்டிடங்கள், மைதானங்கள் என்று நிறைய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றன. பல அரச நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி, கல்முனை செயலக கட்டிடம் (ஆயிரங்கால் மண்டபம்), கல்முனை குடிநீர் திட்டம், பொதுச் சந்தை, கிட்டங்கியில் தண்ணீர் இறைக்க இராட்சத இயந்திரம், குளத்தைப் பிளந்து ஹிஜ்றா வீதி என்று எத்தனையோ சேவைகளை ஏ.ஆர்.மன்சூர் ஆற்றியுள்ளார்.
தான் வழங்கிய அத்தனை ஆயிரம் தொழில்களுக்கும் ஒரு சதம் கூட, ஒரு பொருள் கூட ஒருவரிடமும் இவர் பெற்றுக் கொள்ளவில்லை. தரகர்களின் தலையீடின்றி, எவரது சிபாரிசும் இல்லாமல், தேவைக்கும், தகைமைக்கும் ஏற்ப அத்தனை தொழில்களும் தனது நேரடி தெரிவின் மூலமே வழங்கப்பட்டன.
தனது தொகுதியிலுள்ள சகல ஊர்களுக்கும் சகல சமூகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டது,
காசுக்கு மட்டும்தான் தொழில், தன் இனத்துக்கு மட்டும்தான் தொழில், தன் ஊருக்கு மட்டும்தான் தொழில் போன்ற குறுகிய கொள்கைகளும், கோசங்களும் இவரது பதவிக்கு காலத்தில் மறைந்து மடிந்தன.
அத்துடன் இலஞ்சம் பெறுபவர்களுக்கும் ஊழல் புரிபவர்களுக்கும், கடமையில் கண்ணியம் காக்காதோருக்கும் நடுக்கமும், காய்ச்சலும் ஏற்பட்டது..
கற்றறிந்த மகான்களும், மாமேதைகளும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் மாவட்ட அமைச்சராக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இரண்டாம் எலிசபத் மகா இராணியாரின் கணித ஆசிரியர்- அடங்கா தமிழர் சி.சுந்தரலிங்கம் ஐயா அவர்கள் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் வகித்த வர்த்தக, வாணிப அமைச்சர் பதவி இந்த மன்சூருக்கு ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்சூர் போட்டியிடவில்லை. அப்போது தேசியப்பட்டியல் நியமனம் கிடைத்தது.
அதேபோன்று 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் போட்டியிடாது தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க, அனுர பண்டாரநாயக போன்றவர்கள் எத்தனை தடவைகள் கெஞ்சி கெஞ்சிக் கேட்டபோதிலும் ஜனநாயகத்தில் கொண்ட பற்றால் இரண்டாம் தடவையும் நியமன எம்.பியாக பதவி பெற விரும்பாமல் மக்களின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தால் இலகுவாக கிடைக்கவிருந்த எம்.பி. பதவியைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உதறித்தள்ளிய ஓர் உத்தமர்தான் இந்த மன்சூர்.
மன்சூருடைய அன்றாட வாழ்க்கை இறை பக்தி மிக்கதாகவும், கட்டொழுங்கு தவறாததாகவும், பக்கசார்பற்றதாகவும் இருந்து வந்ததை நாம் அறிவோம்.
சந்தர்ப்பவாதமோ, இன ரீதியான சிந்தனையோ, அரசியல் பழிவாங்கலோ மன்சூர் அவர்களிடம் அறவே இருக்கவில்லை. ‘பிளவுபடாத இலங்கையில் சகல சமூகங்களுக்கும் சம அந்தஸ்து’ என்பதே மன்சூரின் அரசியல் சித்தார்ந்தமாக இருந்தது.
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் சமூகத்தின் ஏகோபித்த காட்சியாகத் திகழ்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, கல்முனை தொகுதியில் அதன் சொந்த அபேட்சகரை நிறுத்தி இருந்த போதிலும், தமிழ் மக்கள் மன்சூருக்கே தங்கள் வாக்குகளை போட்டு அமோக வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தனர்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தினதும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையினதும் ஸ்தாபகர் இந்த மன்சூரேதான் என்பதற்கு நான் கண்கண்ட சாட்சி.
இவை தவிர மட்டக்களப்பு- கல்முனை- பொத்துவில் புகையிரத சேவை, கல்முனை வயல் நிலங்களில் இரண்டு போக வேளாண்மை, கல்முனையில் மீன்பிடித் துறைமுகம், மாவடிப்பள்ளியில் பீங்கான் தொழிற்சாலை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசால் வளவுக்குள் பிரமாண்டமான கலாச்சார மண்டபம் போன்றவை மன்சூர் மரணிக்கும் வரை இருந்து வந்த ‘ஈறல்கள்’.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் மன்சூருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் சூட்டி மகிழக் காரணம், அப்பல்கலைக் கழகத்தை குவைத் நிதியினூடாக அபிவிருத்தி செய்தமைக்காக மட்டுமன்றி அவரது ஆளுமைக்காகவுமே.
அத்தகைய ஆளுமை நிறைந்த அரசியல் கணவான்- மா மனிதர் மன்சூரின் அரசியல் தலைமைத்துவம் போன்றதொரு தலைமைத்துவம் மீண்டும் கல்முனையில் தோன்றும் காலம் எதுவோ அக்காலம்தான் கல்முனை கிழக்கின் முகவெற்றிலையாக பரிணமிக்கும் என்பது திண்ணம்.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்வான சுவர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
Aslam S.Moulana
Journalist

