(கல்முனை ஸ்ரீ )
இலங்கைக்குக் கிழக்காக வங்கக் கடலின் தென்பகுதியில் இன்றையதினம் (19) வலுவான வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடமேற்கு மேற்கு என்று நகர்ந்து இலங்கையின் கிழக்கு கடற்பகுதி வழியாகத் தமிழக ஆந்திரக் கடற்பகுதிகளை அண்மித்து கரையைச் சேராமலே மீண்டும் கடலை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (21ம் திகதியளவில் இது ஒரு வலுவான ஆழ்ந்த தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புகள் உண்டு)
இதன் காரணமாக தற்போது கிடைக்கும் மழைக்கு மேலதிகமாக நாளை (20) முதல் எதிர்வரும் 24ம் திகதி வரை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மிதமானதும், கனமானதும், மிகக் கனமானதுமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (நாளை(20) முதல் 24ம் திகதி வரை மழையுடனான வானிலையும், 28ம் திகதி வரை மேகமூட்டமான குளிரான சூழலும் நிலவும்
தற்போது இலங்கைக்குத் தெற்கே நிலவிய சுழற்சி இலங்கையை விட்டு மேலும் தெற்காகவும் தென்மேற்காகவும் நகர்ந்துகொண்டுள்ளமையால் கிழக்கில் ஆங்காங்கே மழைவீழ்ச்சியும் ஓரளவு பலமான காற்றும் வீசுகிறது.
உருவான சுழற்சியினால் நாளைமுதல் (20) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மிதமாகவும் கனமாகவும் மழைவீழ்ச்சி பதிவாகும் அதேவேளை, 21,22ம் திகதிகளில் பொத்துவில் தொடக்கம் வாகரை வரையான கிழக்கின் கரையோர மற்றும் உட் பிரதேசங்களில் மிகக் கனமழை பதிவாகும் வாய்ப்புகள் உண்டு என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். 23,24ம் திகதிகளில் மிதமான மழைவீழ்ச்சியும் மேகமூட்டமான வானிலையும் அமைந்திருக்கும்.
நாளை(20)முதல் வடக்கு மாகாணத்தில் மேகமூட்டமான வானிலை நிலவுவதுடன், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தின் ஒருசில பிரதேசங்களில் மிதமான மழைவீழ்ச்சி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. எனினும் 21,22ம் திதிகளில் வடக்கு மாகாணத்தில் பரவலான மழைவீழ்ச்சி கிடைக்கத் தொடங்கும். யாழ்ப்பாணத்தில் ஏனைய மாவட்டங்களை விடவும் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கும்.
இந்தச் சுழற்சிமூலம் நாளை (20) முதல் 24ம் திகதி வரை கிழக்கு மாகாணம் 175-250mm வரையான திரட்டிய மழைவீழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளும் அதேநேரம் வடக்கில் 100-150mm வரையான மழைவீழ்ச்சி கிடைக்கும்.
வடகீழ்ப் பருவக் காற்றின் மூலம் கிடைக்கும் இறுதியான சுழற்சி இதுவாகும். மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் (6) இருந்து வடக்கு கிழக்கில் வறண்ட வானிலை நிலவும்.
பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காத்தான்குடி, செங்கலடி, ஏறாவூர், அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, நிந்தவூர், களுவாஞ்சிக்குடி முதலான மட்டு அம்பாறையின் கிழக்குப் பிரதேசங்களிலும், மணலாறு, வவுனியா நகரம், நெடுங்கேணி, கனகராயன்குளம், முல்லைத்தீவு நகரம், அலம்பில், ஓமந்தை, குமுளமுனை முதலான வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதேசங்களிலும் 24 ம் திகதி வரையான நாட்களில் கனமழை கிடைக்கும்
