கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்காளி த.கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும், வழக்கின் இடையீட்டு மனுதாரர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகினர்.

இவ்வழக்கின் இடையீட்டு மனுதாரர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோரும் இன்று மன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது பக்க நியாயங்களை மன்றுக்கு முன்வைத்து வாதிட்டார். அதில் இது உப பிரதேச செயலகமல்ல. 1993 ம் ஆண்டு முதல் கல்முனை வடக்கு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கி வருவதாகவும், இந்த செயலகத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர கட்டிடம் இருப்பதாகவும், 250 க்கு அதிகமான உத்தியோகத்தர்கள் கடமை செய்கிறார்கள் என்றும் 3 தசாப்தங்களுக்கு மேல் பிரதேச செயலகமாக இந்த செயலகம் இயங்கியதாகவும், சில வருடங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேச செயலாளர் இந்த செயலகத்தின் அதிகாரங்கள் சிலதை பறித்துள்ளதாகவும் வாதத்தை முன்வைத்து இந்த செயலகத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் இல்லாது விட்டாலும் நாட்டின் பல இடங்களில் அமைச்சரவை அனுமதியுடன் சில செயலகங்கள் இயங்குகிறது. இந்த செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக இந்த நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி எதிர்தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்தையும் நீதிமன்று கேட்டறிந்து இந்த வழக்கின் விசாரணைக்கு முழுநாள் ஒதுக்கவேண்டும் என்பதால் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 08ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் ஏ.எம். நசீர் (நஸீர் ஹாஜியார்), டாக்டர் கே.எல். ரயீஸ் தரப்பினர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்கள் சார்பிலான சட்டத்தரணிகளும் அவர்களின் வாதங்களை முன்வைத்தனர். ச. அந்த வழக்குகளின் விசாரணைகளும் எதிர்வரும் ஜூலை 08ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.