கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், எல்லை போடும் செயற்பாடுகளும் தொடர் கதையாகவே உள்ளன. குறிப்பாக அதிகளவான அரச காணிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். குறித்த அரச காணிகள், வெள்ளம் வடிந்தோடும் நீர் ஏந்து பகுதிகளில் அத்துமீறி எல்லை போடுவதும், கட்டிடம் கட்ட முயல்வதும் ,இதனை கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்கள் தடுத்து நிறுத்துவதுமாக அடிக்கடி நிகழ்கிறது. இது இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும்.

மாரி காலத்தில் வெள்ளம் குடியிருப்புக்குள் தேங்கி நிற்காது வெள்ளம் வடிந்து செல்லும் நீர் ஏந்து பகுதிகளை மண் நிரப்பி ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்படும் என்பது கடந்தகால அனுபவங்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை 01 சி பிரிவில் இவ்வாறு காணிகளை அடாத்தாக மண் நிரப்ப முற்பட்ட பல சம்பவங்கள் இடம் பெற்றமை யாவரும் அறிந்ததே.


நேற்றைய தினம் கல்முனை இலங்கை வங்கிக்கு முன்பாக உள்ள அரச காணிக்குள் எல்லை போட முற்பட்ட சம்பவம் அங்கு ஒரு பதட்டமான சூழ் நிலையை உருவாக்கி இருந்தது. சம்பவ இடத்திற்கு கல்முனை தமிழ் இளைஞர் சேனையினர் விரைந்து தடுத்திருந்துடன் ,உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் தெரியப்படுத்தி இருந்தனர்.


ஆகவே ல்முனையில் உள்ள அரச காணிகளை மாவட்ட செயலகம் எல்லையிட்டு பதாதையிட்டு அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வோருக்கு எதிராக சட்ட நடடிவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.


கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் என மக்கள் பேசுவதையும் அவதானிக்க முடிந்தது.