வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோட்டைக்கல்லாற்றில் பாரம்பரியமாக காலாகாலமாக மரண வீட்டு நடைமுறை ஒன்று பேணப்பட்டு வருகின்றது. 

கோட்டைக்கல்லாற்றுக்கே  உரித்தான தனித்துவமான மரணவீட்டு நடைமுறையை ஏனையவர்கள் பார்த்து கேட்டு ஆச்சரியமாக வியந்து பாராட்டுவதுண்டு.

அப்படி என்னதான் அந்த நடைமுறை என்று கேட்கிறீர்களா?

அதுபற்றி  பார்ப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு எனும் பழந்தமிழ் கிராமம் அமைந்திருக்கின்றது.

 பெரிய கல்லாற்றுக்கும் ஒந்தாச்சிமடத்திற்கும்  இடையில் சுற்றவர நீர்நிலைகளால் சூழப்பட்ட ஒரு கிராமமே கோட்டைக்கல்லாறு கிராமம்  ஆகும்.

அங்கு இலங்கையில் எந்த ஒரு கிராமத்திலும் இல்லாத சிறப்பான ஒரு நடைமுறை பேணப்படுகின்றது.

அதுதான் மரண வீட்டு நடைமுறை .

கோட்டைக்கல்லாற்றிலுள்ள ஒரு வீட்டில்  மரணம் இடம்பெற்று விட்டால் அந்த மரணத்திற்கான அத்தனை செலவுகளையும் அந்த கிராம மக்களே பொறுப்பேற்று கொள்கிறார்கள்.

 இதனால் திடீரென்று ஒரு மரணம் சம்பவித்து விட்டால் அங்கு இருப்பவர்களுக்கு பதற்றமோ பயமோ , பணமில்லை என்ற அழுத்தமோ  ஏற்படாது.

 காரணம் குறித்த மரணவீட்டுக்குரிய அத்தனை செலவுகளையும் கிராம மக்கள் அனைவரும் தங்களால் ஆன பங்களிப்பை வழங்குவதன் ஊடாக பூர்த்தி செய்யப்படுகிறது.

இது கோட்டைக்கல்லாற்றுக்கான ஒரு பாரம்பரிய தனித்துவமான நடைமுறை.

இந்த வாரம் அங்கு  ஒரு மரணம் சம்பவித்தது.75 வயதுடைய சுப்பிரமணியம் சபாரெத்தினம் என்பவரது மரணம் அது. அந்த வீட்டுக்கு சென்றிருந்த பொழுது இந்த நடைமுறை பற்றி அறிந்தேன்.

அதுபற்றி அங்கிருந்த இருவரிடம் வினவியபோது அவர்கள் பூரண விளக்கம் அளித்தார்கள் .

ஒருவர் அங்கு ஆலயம் சார்பாக வந்திருந்த ஒரு குடித்தலைவர் மற்றவர் அந்த மரண வீட்டின் மருமகன்.

ஆலயம் சார்பாக குடித்தலைவர்( அடப்பனார்)   தம்பியப்பா ஜெயந்திரராஜா  கருத்து தெரிவிக்கையில் ..

நான் இங்குள்ள 12 குடிகளில் ஒன்றான ராசாத்தி குடியின் தலைவர்.

எமது ஊரான கோட்டைக்கல்லாற்றில்  ஒரு மரணம் நிகழ்ந்தால் அவர்கள் முதலில் ஆலய வண்ணக்கரிடம் அறிவிப்பார்கள் . அவர் எமது  கணக்கப்பிள்ளை மற்றும் 12 குடித்தலைவர்களை இணைத்து 14 பேரும் மரணம் வீட்டுக்கு செல்வோம் .

அங்கு கிராம மக்களின் தங்களாலான நிதிப் பங்களிப்பை எழுதி பதிந்து பெற்றுக் கொள்வோம்.

அந்த நிதியை அன்றே ( பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட மறுகணம்) மரண வீட்டாரிடம் அன்றே அதனை ஒப்படைத்து விட்டு வருவோம். அதனால் மரண வீட்டு காரருக்கு பணமில்லை என்று எவ்வித பயமோ மன அழுத்தமோ வராது . 

இந் நடைமுறை நான் பிறப்பதற்கு முன்பிருந்தே காலாகாலமாக  பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதை பெருமையோடு கூறுகிறேன். அதனை வரவேற்கின்றேன் என்றார்.

 மருமகன் வங்கி முகாமையாளர் நீதிராஜா சண்முகப்பிரியன் கூறுகையில் ..

இது கோட்டைக்கல்லாறுக்குரிய  தனித்துவமான ஒரு நடைமுறை.

உதாரணமாக இங்கு ஒரு மரணம் சம்பவித்து விட்டால் அவர்கள் ஆலய வண்ணக்கரிடம் சொல்லிவிட்டு ஆத்தியடிக்கடை என்கின்ற ஒரு கடை இருக்கின்றது .அங்கே ஒரு கணக்கை ஆரம்பிக்க வேண்டும். எந்தவிதமான முற்பணமும் செலுத்தாமல் மரண வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கலாம் .

ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல்  பூதவுடலை  மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கி விட்டு வந்த கையோடு ஊரவர்கள் அனைவரும் இணைந்து மரணம் வீட்டில் ஒன்று கூடுவார்கள் .

அங்கு ஆலய வண்ணக்கர்கள் குடித்தலைவர்கள் முன்னிலையில் கிராம மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியை( மொய்) அங்கு வழங்குவார்கள். இறுதியிலே அந்த மொத்த நிதியை மரணவீட்டாருக்கு வழங்குவார்கள்.

இந்த நடைமுறையால் மரண வீட்டு செலவுகள் பற்றி அச்சப்பட தேவையில்லை. கவலையில்லை .

பணம் இல்லை என்ற பயமும் இல்லை. வேறு ஊரவர்கள் இதைப் பற்றியறிந்து ஆச்சரியப்படுவதுண்டு. இதனையிட்டுநான் பெருமைப்படுகிறேன் . என்றார்.

நான் சமூகமளித்த குறித்த மரணவீட்டில் அன்றைய தினம் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் மக்கள் பங்களிப்பு இருந்தது

 பின்னர் வந்தவர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள். அதனால் அத் தொகை ஐந்து லட்சத்தை தாண்டும்.அதனை ஆலய பிரமுகர்கள் அந்த இடத்தில் எண்ணி பதிவிட்டு வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

அனைத்து ஆலயங்களின் வண்ணக்கரும் ஊர்த் தலைவருமான எஸ்.வினாயகமூர்த்தி முன்னிலையில் இக் கைங்கரியம் நடைபெறுகிறது. மற்றும் கணக்குப் பிள்ளை 12 குடித்தலைவர்கள் ( அடப்பனார்) சமூகமளித்திருந்தனர்.

மறுகணம் அன்றைய செலவான பறை மேளம் ,சவப்பெட்டி, கூரைமுடி ,கட்டாடி ,  வாகனம்,,ஒலிபெருக்கி, கூடாரம் போன்றவற்றிற்கான கொடுப்பனவை வீட்டார் வழங்கி வைத்தனர்.

இதேபோன்று மிகவும் சிறிய அளவில் எட்டுச் செலவு மற்றும் 31 அமுது தினங்களிலும் நிதிச் சேகரிப்பு நடைமுறை இருக்கும்.

மேலும், இங்கு உள்ள மரண வீடுகளில் சோடாவோ அல்லது வெற்றிலை பாக்கோ வேறுகுடிபானமோ  பரிமாறப்படுவதில்லை. மாறாக தேவையானால் பால்தேனீர் மாத்திரம் அங்கு வழங்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த சிறப்பான நடைமுறையை ஏனைய கிராமங்களும் பின்பற்றும் பட்சத்தில் மரண வீட்டார் கவலைக்கு அப்பால் தங்களுக்கான அழுத்தங்களையும் பயத்தையும் பதட்டத்தையும் 100% தவிர்த்துக் கொள்ளலாம் என்பது வெள்ளிடை மலை.

வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 

காரைதீவு  நிருபர்