P.S.M

இலங்கையில் 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி  புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும், 1929 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும் சான்றுகள் கூறுகின்றன.


1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புகையிரத சேவையும், புகையிரத நிலைய வசதிகளும் காலத்திற்கு காலம் புணரமைக்கப்பட்டு வந்த போதிலும், அதன் வளர்ச்சி நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் வளர்ச்சி அடையவில்லை என மக்கள் கருதுகின்றனர்.

இரவு 1 மணி அளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சேவை தற்போது நடைமுறையில் உள்ளது. இச்சேவையை பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரையான மக்கள் பயன்படுத்துகின்றனர்.


இந்த ரயில் பயணத்திற்காக பொத்துவிலில் இருந்து மாலை 8 மணி அளவிலும், அக்கரைப்பற்றிலிருந்து மாலை 9.15 மணி அளவிலும் கல்முனையில் இருந்து இரவு 10 மணி அளவிலும் மக்கள் பேரூந்தின் மூலம் பயணிக்க வேண்டி உள்ளது.
இதுவே பெரும்பாலான மக்கள் பயணம் செய்யும் முறையாக இருக்கின்றது. அதன் பின் வாகன வசதிகள் குறைவு.


இவ்வாறு பயணிப்பவர்கள் இரவு 11 மணி அளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அடைகின்றனர். மாலை 8, 9, 10 மணியில் இருந்து பயணித்த மக்கள் இரவு 11 மணிக்கு புகையிரத நிலையத்தை அடைந்தும் இரவு 1 மணி வரை  பயணத்திற்காக காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறான ஒரு நீண்ட நேர இடைவெளியில் இயற்கைக் கடன்களுக்கான வசதியோ, சிற்றுண்டிச் சாலையோ,
இருந்து உணவை உண்பதற்கான வசதியோ இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி மின்குமிழ்கள் கூட அணைக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறான நிலையில் அரச ஏனைய துறைகளின் வளர்ச்சி போல் மிகவும் முக்கியமான போக்குவரத்து  சேவை வசதிகளும் குறிப்பாக மட்டக்களப்பு புகையிரத நிலைய வசதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
எனவே மக்களின் கருத்துக்கு அமைவாக பொதுமக்களின் நன்மை கருதி, மட்டக்களப்பு புகையிரத நிலைய வளாகம் உடனடியாக புணரமைக்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மேலும் புகையிரத நிலைய வளாகம் தூய்மை செய்யப்பட்டு, மக்களின் நடமாட்டத்திற்கு உகந்த வகையில் நவீன மின்குமிழ்களும், பொழுது போக்குக்கான தொலைக்காட்சி வசதி, சொகுசு இருக்கைகள், தூய்மையான மலசல கூடம், மக்கள் தேவைக்கான சிற்றுண்டி சாலை போன்ற அவசிய தேவைப்படும் விடையங்களை புகையிரத வளாகத்தினுள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.