159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு   கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவினை   முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை  தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாட்டில் கல்முனை இயேசு சீவிக்கின்றார் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான கற்றல் உபகரண தொகுதிகள்  நேற்று (3)  வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்   கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்த கொண்டு முதலில் குறித்த இல்ல சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டதுடன்  நிகழ்வில்  கலந்து கொண்டு   அறிவுரையும் வழங்கினார்.

 
எதிர்காலம் மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது. பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.தற்போது படிப்புகளில் சிறுவர்கள் கவனம் செலுத்துவதும் குறைவு. எனவே சிறுவயது முதல் எமது பிள்ளை செல்வங்களை  நாங்கள் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும்.   சிறுவர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற அனைவரும் ஒத்துழைப்புகளை நல்க வேண்டும் என அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்   கேட்டுக்கொண்டார்.

பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட    மாணவர்களுக்கு   பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ. வாஹீட்  பொலிஸ் நிலைய  சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.