இன்று (12) உலகத் தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதரவை வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தாதிய தின நிகழ்வில் பிரதம அதிதியாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களும், விசேட அதிதியாக மட்டக்களப்பு தாதிய கல்லூரியின் அதிபர் ஹிமாலி பீரிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.


நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக விளங்கேற்றலுடன், தாதியத்தின் அன்னை Florennce Nightingale அவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து விளக்கேற்றிய கௌரவம்,  சத்தியபிரமாணம், cake- cutting,  என்பனவற்றுடன் விழிப்புணர்வு கலை நிகழ்வுகளும்  நடைபெற்றுள்ளது.


வரவேற்புரை நடாத்திய தாதிய பரிபாலகர் சசிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் தாதியத்தின் புனிதம், தூய்மை, நேர்மை, கடமை, கருணை பற்றி வலியுறுத்திய கருத்துக்களை முன்வைத்தார்.

விசேட அதிதி பேசுகையில், தாதியத்தின் கடமைகளையும், வேறுபாடுகள், வளர்சிகள் பற்றி மிகநுட்பமாக எடுத்துரைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தியதுடன், கல்முனை ஆதார வைத்தியசாலையின்  தாதியர் பெருமை,  வைத்தியசாலையின் அழகு,  பொதுவான சேவை, உள்வெளி சுற்றுப்புற சூழலின் தோற்றத்தை பாராட்டியதுடன், அதனால் நோயாளர்கள் பெறும் உணர்வையும் எளிமையாக வெளிப்படுத்தினார்.

பிரதம அதிதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் தனதுரையில்
வைத்தியசாலையின் முதுகெலும்பு போல் செயலாற்றும் தாதிய சேவையை ஊக்குவிப்பது தண்ணீருக்கு செய்யும் முதலீடு போன்றது.


அதாவது ஒரு நாடு தண்ணீருக்கு 1% முதலீடு செய்தால் அது 200% பயன் தரக்கூடியது. அதுபோல நான் உங்களுக்காக செய்யும் முதலீடு      (கொடுப்பனவுகள்) அதை விட மேலான பலனை எமது வைத்தியசாலைக்கான சேவையாக பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு அதற்காகவே உங்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. நான் அறிந்த வகையில் தாதியர்கள்,  ஆசிரியர்கள் போன்ற பெற்றோர்களின் பிள்ளைகள் மிக உயர்வான நிலைக்கு செல்வதற்கு அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சேவையே! காரணம் .


உங்கள் சேவையை உங்கள் சீருடை போல் மிக வெண்மையாக என் உள்ளத்தில் பதிவு செய்துள்ளேன். நீங்கள் ஆற்றும் சேவைகள் நோயாளர்கள் மூலம் என்னை வந்து சேரும்போது “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்ட தாய்போல” மகிழ்வை உணர்கின்றேன். அந்தவகையில் ஒரு தாய் தந்தையின் உணர்வுடன் பெருமை கொள்கின்றேன்.


என்ற பல சிறப்பு கருத்துக்களுடன் அனைவரினதும் மனங்களில் சேவையாற்றும் உணர்வை மிக நுட்பமாக பதியவைத்ததுடன்,தனது ஆரம்ப கால சேவையில் அதாவது 25 வருடங்கள் முந்திய நினைவுப்பதிவுகளில் கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றிய இரு தாதியர்களின் குணாம்சங்களை தத்துருபமாக விவரித்து அனைவரும் மனம் நெகிழும் வகையிலும். காலம் கடந்தாலும் சேவை எவ்வாறு பேசும் என்று கூறி அனைவரின் மனங்களிலும் ஓர் கடமையுணர்வை விதைத்து விடைபெற்றார்.
நிகழ்வு நன்றியுரையுடன் முடிவு பெற்றது .