ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025
திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025 .05 .09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே .அதிசயராஜ் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற உள்ளது. இந்நூலினை கல்முனை வடக்கு கலாசார பேரவை மற்றும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பும் இணைந்து வெளியீடு செய்ய இருக்கிறது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மேலதிக மாவட்ட செயலாளர் எஸ் .ஜெகராஜன் அவர்களும் கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். அத்தோடு சிறப்பு அதிதிகளாக எழுத்தாளர் உமா வரதராஜன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் தினகரன் தேசிய பத்தரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான குணராஜா அவர்களும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் அவர்களும், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் அதிபர் எஸ் கலையரசன் அவர்களும் , ஜனாப்.ஏ.எல். தௌபீக், மாவட்ட கலாசார இணைப்பாளர்.மாவட்ட கலாசார அலுவலகம்.(கி.மா) அம்பாரை அவர்களும், சுரேகா எதிர்சிங்க மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், அம்பாறை அவர்களும் கல்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன் மற்றும் அம்பாரை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் கலைவாணி தயாபரன் போன்ற இன்னும் பல அதிதிகள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இந்த புத்தகம் பல்வேறு கட்டுரைகளை கொண்டு அமையப் பெற்றுள்ளது. அதாவது சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான கட்டுரைகள், பொருளாதார ரீதியான அபிவிருத்தி தொடர்பான கட்டுரைகள், பெண்களின் உரிமைகள், பெண்கள் எதிரான வன்முறைகள், அது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் அடங்கிய கட்டுரைகள், மகளிர் தினம் தொடர்பான கட்டுரைகள், தலைமைத்துவம், பால் நிலை சமத்துவம் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான கருத்துரைகள் என பல்வேறு பெண்களின் அபிவிருத்தி தொடர்பான கட்டுரைகளை கொண்டு அமைந்துள்ளது.
நூலாசிரியர் தொடர்பாக……
மத்திய முகாம் -02, நாவிதன்வெளியை பிறப்பிடமாகவும் நற்பிட்டிமுனை -02, கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கல்முனை பிரதேச செயலகத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார். 2023 ஆம் ஆண்டு பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் இலக்கியத்துறைக்கான இளங்கலைஞர் விருதினை பெற்றுள்ளார். அத்தோடு சமூக சேவைக்கான வனிதாபிமானி விருதினை இரு தடவைகள் மாகாண மட்டத்தில் முதல் தரத்தில் பெற்றுள்ளார். அதேபோல் சமாதான செயற்பாட்டாளருக்குரிய விருதினையும் 2024 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்ற விடயங்களில் ஆர்வமாக எழுதி வருகின்றார். அத்தோடு பட்டிமன்றங்கள், கவி அரங்குகள், மேடைப்பேச்சுகள் என கலைத் துறையிலும் பங்களிப்பு செய்பவர்.
2017 ஆம் ஆண்டு “சமூகவியல்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை தொகுப்பையும் வெளியீடு செய்துள்ளார். அத்தோடு அலுவலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக சில கையேடுகளையும் வெளியீடு செய்துள்ளார். ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் பரிமாணம் பத்திரிகையின் மங்கையர் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார். அத்தோடு அகரம் கலைக்களஞ்சியத்தின் உப செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார். அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பின் நிர்வாக குழு செயலாளராகவும், அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வலையமைப்பின் நிர்வாக குழுவில் பொருளாளர் என்ற பதவிகளையும் வகித்து வருகின்றார்.
இவர் பால்நிலை சமத்துவம், தலைமைத்துவம், பெண்கள் வலுவூட்டல், மனோகரி (சமூக நலன் சார்ந்த விடயங்கள்), முரண்பாட்டு முகாமைத்துவம், நல்லிணக்கம், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, சனநாயகம் போன்ற தலைப்புகளில் வளவாளராகவும் பணியாற்றி வருகிறார். அம்பாரை மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் கடமையாற்றுகின்றார்.

