அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்-அவர்களின் பதிவில் இருந்து……
- விஜய் 120 முதல் 124 இடங்கள் வரை பெறுவார்!
- திமுக கூட்டணி ஆட்சிக்கும் வாய்ப்பு
- சீமான் பற்றிய கருத்துக் கணிப்புகள் இல்லை.
தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் ஆகக் குறைந்தது 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அது “தொங்கு சட்டமன்றம்” (Hung Assembly) அமையும் ஆபத்து இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
அவ்வாறான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு 23 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பின்னரான கருத்துக்கணிப்புகள் (Exit Polls) வெளியாகி வருகின்றன.
அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் மே மாதம் 4 ஆம் திகதி வெளியாவதற்கு முன்னரே, பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் வெவ்வேறு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
விஜய் 95 முதல் 110 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ரைம்ஸ் ஒஃப் இந்தியா (timesofindia) மதிபீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சௌத் மற்றேர்ஸ் (South Matters) என்ற தென் இந்திய ஆங்கில செய்தித் தளம் ஒன்று, விஜய் 120 முதல் 124 இடங்கள் வரை பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதேசமயம், ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் (financialexpress) என்ற ஆங்கில செய்தி நிறுவனம், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
வோட் வைபர் (Vote Vibe) எனப்படும் ஒரு தனியார் அரசியல் ஆய்வு மற்றும் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தகவலின்படி, அதிமுக கூட்டணி முன்னிலை பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பிரபல அரசியல் வர்ணனையாளரான, அமிதாப் திவாரி (Amitabh Tiwari) இந்த ஆய்வு நிறுவனத்தின் பிரதானியாக செயல்படுகிறார்.
ஆனால், இந்த ஆய்வுகள் எதிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி (NTK) பற்றிய தகவல்களை மதிப்பிடவில்லை. பல நிறுவனங்கள் 2026 தேர்தலில் சீமானின் வாக்கு சதவீதம் 4.95% முதல் 7.9% வரை இருக்கும் என்று கணித்துள்ளன.
இது 2021 தேர்தலை விட (6.5%) சற்று கூடியோ அல்லது குறைந்தோ இருப்பதால், இந்த நிறுவனங்கள் சீமானை “ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக” (King Maker) இக் கணிப்புகளில் முன்னிலைப்படுத்த தவறியுள்ளன…
அதிக இடங்களை வெல்லும் வாய்ப்புள்ள திமுக, அதிமுக மற்றும் விஜய் (TVK) ஆகிய கட்சிகளின் மீதே அதிக கவனம் செலுத்துகின்றன.
தீவிர கட்சி சார்பு இல்லாத, ஆனால் ஒரு மாற்றத்தை விரும்பும் ‘நடுநிலை வாக்காளர்கள்’ (Neutral Voters) சீமானிடம் இருந்து விலகி விஜய்யை நோக்கிச் சென்றிருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்தும் உண்டு.
18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான், சீமானின் பலம். ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தபோது, அதே இளைஞர் கூட்டம் அவர் பக்கமும் ஈர்க்கப்பட்டது.
இதனால், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்கள் இந்த முறை விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என முடிவு செய்திருக்கலாம் என்ற மதிப்பீடுகளும் உண்டு.
இருப்பினும், “தமிழ் தேசியம்” என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் சீமானின் தீவிரத் தொண்டர்கள், விஜய்யை ஒரு திராவிடக் கட்சியின் நீட்சியாக அல்லது கொள்கை தெளிவில்லாதவராக நோக்குகிறார்கள் என்ற விமர்சனங்களும் உள்ளது.
ஆகவே, சீமானின் முன்னைய வாக்குகள் அப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையும் சில விமர்சகர்களிடம் உள்ளது.
அதேவேளை, தமிழ் நாட்டில் நீண்ட காலத்திற்கு பின்னர் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு “கூட்டணி ஆட்சி” (Coalition Government) அமையவும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு, சுமார் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு, மாற்றத்திற்கான அறிகுறியா அல்லது ஆளுங்கட்சிக்கு ஆதரவானதா என்ற கேள்விகளும் உண்டு.
அமைதியாக இருந்த வாக்காளர்கள் (Silent Voters) வெளியே சொல்லாமல் வாக்களித்து, முடிவுகளைப் பெரிய அளவில் மாற்றுவார்கள் என்பது பற்றியும் சில ஆய்வுகள் துல்லியமாகக் கணிக்கின்றன.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

