சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாகத் தீர்க்குமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று (01) கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே தவிசாளர் மாஹிர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட வருவோர் ஒரு சமயத்தில் ஒருவர் மாத்திரம் உள்ளே அனுமதிக்கப்படுவதால், ஏனையோர் வீதியோரங்களில் நின்று சிரமப்படுகின்றனர். இதனைக் தவிர்க்கும் முகமாக, ஒரு நோயாளருக்கு இரண்டு அனுமதி அட்டைகள் (Pass) வழங்குவதுடன், ஒரே நேரத்தில் இருவர் பார்வையிடச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். மேலும், பார்வையாளர்களின் நலன்கருதி வைத்தியசாலை வளாகத்திற்குள்ளேயே காத்திருப்புப் பகுதி ஒன்றினையும் ஏற்படுத்த வேண்டும். இவற்றினைச் செய்கின்றபோது வைத்தியசாலையின் நுழைவாயில் பிரதான வீதியில் ஏற்படுகின்ற நெரிசலினை குறைக்க முடியும்.
அத்துடன் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள கிளினிக் நிலையங்களில் சேவைகளை பெறுவதற்காக வருகைதரும் தாய்மார்கள் உட்கார்ந்து தாமதித்து சேவையினை பெறுவதற்குரிய வசதிகள் போதாமையினால் கிளினிக் வருகின்றவர்களும் பல்வேறு இன்னல்களை எதிர் நோக்குகின்றனர். எனவே அவர்களின் நலன்கருதியும் காத்திருப்புப் பகுதி உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் அத்துடன் செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி பிராந்திய மக்களின் சுகாதாரத் தேவைகளை அறிந்து சேவையாற்றுவதற்கு பிராந்திய பணிப்பாளர் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இது ஒரு முன்மாதிரியான செயற்பாடாகும்
என்றார்.
குறித்த பிரச்சினைகளை கவனத்திற்கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவற்றினை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது சம்மாந்துறை பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பிரதேசத்தின் பொதுச் சுகாதாரம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









