2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் பணியாற்றிய உதவி பணிப்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான 2.5 மில்லியன் டொலர் இணையவழி மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் இவர் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டதையடுத்து, முன்னதாகவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
ஹேக்கர்கள் மூலம் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த பெரிய அளவிலான நிதி மோசடி தொடர்பாக, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் ஆரம்ப கட்டத்தில் சந்தேகிக்கின்றனர் என்று ‘அத தெரண’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தின் உண்மையான காரணங்கள் மற்றும் பின்னணியை கண்டறிய, பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.