செல்லையா பேரின்பராசா.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நடராசா புஸ்பராசா பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். கடந்த  28.02.2024 அன்று கூடிய கிழக்குப் பல்கலைக்கழக பேரவை 12.11.2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

கலாநிதி நடராசா புஸ்பராசா தனது ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்தரம் வரை சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள கமு / சது /  றாணமடு இந்துக் கல்லூரியில் கற்று உயர்தரப் பரீட்சையில் அதி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு தெரிவானவர்.

தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய பல்கலைக்கழகங்களில் தமது உயர்கல்வியை மேற்கொண்டார். 

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது சிறப்பு கலைமாணிப் பட்டத்தையும், அயர்லாந்தில் உள்ள அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் முதுகலைமாணிப் பட்டத்தினையும்,  (LLM- The National University of Ireland, Galway (Ireland), இத்தாலியில் உள்ள Scuola Superiore Sant’Anna வில் கலாநிதிப்  பட்டத்தினையும் பெற்றுக் கொண்டவர். (PhD- The Scuola Superiore Sant’Anna, Pisa (Italy).

 இதற்கு மேலதிகமாக இவர் இரு கலாநிதிப் பட்டப்பின் கற்கை நெறிகளை  சீனாவின் ஷாங்காய் மற்றும் தைவானில் உள்ள பிரபல்யமான பல்கலைக் கழகங்களில் பூர்த்தி செய்துள்ளார். [(Postdoctoral Fellowships (Shanghai Jiao Tong University, China & Academia Sinica, Taiwan)]. மேலும், ஜெர்மனியின் ஹைடெல்பெர்க்கில் உள்ள Max Planck Institute for Comparative Public Law and International Law இல் வருகை தரு சிறப்பு ஆய்வாளராகவும் சிறுது காலம் பணியாற்றியுள்ளார்.

கலாநிதி நடராசா புஸ்பராசா பேராதனைப் பல்கலைக் கழகத்தில்  உதவி விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும்,  பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன் பல சர்வதேச ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார் என்பதோடு,  சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு புலமையாளராகவும் விளங்கும் இவர் துறைநீலாவணைக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார்.