2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி உதயமான கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம், இன்று தனது மூன்றாவது அகவையை கடந்து நான்காவது ஆண்டில் கால் பதிக்கிறது.

அவசியமான சேவையினை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் இந்த அமைப்பினருக்கு கல்முனை நெற் ஊடக வலையப்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்


கடந்த மூன்று ஆண்டுகளாக, கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி, ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தனது ஆன்மீக சொற்பொழிவுகளை முன்னெடுத்து வருகிறது.

அதுமட்டுமல்லாது, இலங்கையைத் தாண்டி மலேசியா, குவைத், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் எமது சொற்பொழிவாளர்கள் தங்களது அறிவார்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி, தமிழ்ச் சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

எமது இளைய தலைமுறையினரிடம் சைவ சமயத்தின் பெருமையையும், தமிழ்மொழியின் ஆழத்தையும், அதன் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்துடன், பல சொற்பொழிவாளர்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பை உருவாக்கினர்.


திராய்க்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனித வளாகத்தில் உதயமான இந்த கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம், இன்று அறிவொளியைப் பரப்பும் ஓர் அர்ப்பணிப்புமிக்க அமைப்பாக வளர்ச்சி பெற்று, சமயத்திற்கும், தமிழுக்கும், சமூகத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது.

இந்தக் காலப்பகுதியில் ஆலய சொற்பொழிவுகள் மட்டுமல்லாது பாடசாலைகள், ஏனைய அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்கும், விழிப்புணர்வுகளை செய்வதற்கும், அனுமதி வழங்கி அந்த இடத்தை எங்களுக்காக தந்து, கௌரவப்படுத்திய ஆலய பரிபாலன சபைனர்கள், அதேபோல நிறுவனத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிபர்கள், ஆலயத்தினுடைய குருமார்கள், எங்களுடைய சொற்பொழிவுகளை ஒவ்வொரு ஆலயத்திலும் நிகழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கோரிக்கை விடுக்கக்கூடிய அன்பான உறவுகளாக இருக்கக்கூடிய பக்தர்கள், எங்களுடைய சமயத்தினுடைய மேன்மையையும், சமயத்தினுடைய தார்ப்பரியத்தையும், இளைய சந்ததிக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, எங்களுடைய கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தோடு கைங்கோர்த்து பயணிக்கக்கூடிய, அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இந்த தருணத்தில், கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் சார்பில், மனம் நிறைந்த, உளமார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறோம்.

காரணம், உங்களுடைய அன்பும், ஆதரவும், வழிகாட்டுதலும், இல்லாமல், நாங்கள் மூன்று வருடங்களை கடந்திருக்க முடியாது.

ஆலயங்களில் பக்தர்களின் மனதில் மாற்றத்தை விதைத்த திருப்தியோடும், பாடசாலை மாணவர்களுடைய விழிப்புணர்வுக்காக கைகொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவோடும் நான்காவது ஆண்டில் கால்பதிக்கிறோம்.

இந்த நான்காவது ஆண்டில் இன்னும் உத்வேகத்தோடு, உங்கள் அனைவருடைய ஒத்துழைப்போடும், இறை ஆசியோடும் பயணிப்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.


“தமிழும் சைவமும் தழைத்தோங்கி, அறிவொளி பரவட்டும்; கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் பணி என்றும் தொடரும்”

You missed