கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அமைக்கப்பட்ட கல்முனை குருந்தையடி தொடர் மாடி குடியிருப்பு 180 குடும்பங்களை கொண்ட ஒரு சிறு கிராமமாகவே இருக்கின்றது.
பல தேவைகளுக்காக இம் மக்களை நாடிவரும் அனைவரும் இப்பகுதி மக்களின் அவல நிலையில் பங்கு கொள்வதில்லை.
அண்மையில் ஏற்பட்ட மழைநீர் வெள்ள அனர்த்தம் காரணமாக கல்முனை குருந்தையடி மக்கள் மின்சாரம், நீர் வழங்கல் என்பனவற்றை ஐந்து நாட்களாக  இழந்து அல்லலுற்ற வேளையில் அம்மக்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த கல்முனை வடக்கு பிரதேச  செயலாளர் அதிசயராஜ் அவர்களும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் அவர்களும் சமூகப் பணியாளர், இளம் சட்டத்தரணி நிதான்சன் ஆகியோரின் கூட்டு முயற்சியால்  01/12/2025 மக்களுக்கான தண்ணீர் வசதி வவுசர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட தவிசாளர்களின் ஈகை மனப்பாங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாக
மட்டக்களப்பு மண்முனை தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மேனசுந்தரம் வினோராஜ், போரதீவுபற்று பிரதேச சபையின் தவிசாளர் மதிமேனன் ஆகியோருடன் அவர்களின் பணியாளர்களும், பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களும்  நேரடியாக வந்து மனிதாபிமான பணியாக நீர் வழங்கல் சேவையை மேற்கொண்டிருந்தனர். 


இதனைத் தொடர்ந்து கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி  குணசிங்கம் சுகுணன் அவர்கள் இச் சேவையை வைத்தியசாலையில் வவுசர் மூலம் தொடர்ந்து வழங்கும் மனிதாபிமான சேவையை பொறுப்பேற்றார். இன்றும் வழங்கப்பட்டது


இதற்கு அமைவாக இன்று (2) முதல் கட்டமாக மக்களின் முக்கிய தேவையான சுத்தப்படுத்தலுக்கு தேவையான நீர் வழங்கல் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக இனி வரும் நாட்களில் குடிநீர் வழங்கும் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிகின்றது.


இது சம்பந்தமாக பயன் பெற்றோர் நன்றி தெரிவித்து வருகின்ற போதிலும்,
கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக சமூகப் பணியாளரும், இளம் சட்டத்தரணியுமான நிதான்சன் அவர்கள் மட்டு மாவட்ட பிரதேச சபையின் தவிசாளர்களுக்கும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் இதில் பங்கு கொண்ட  அனைவருக்கும் மனம் திறந்து பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.