திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த துறவிகளுக்கு என்றும் பிறிதொரு சட்டம் கிடையாது. அனைவரும் பொது சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகாரம் மற்றும் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு என்று பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த துறவிகளுக்கு என்றும் பிறிதொரு சட்டம் கிடையாது.அனைவரும் பொதுச்சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்.
இனவாதம் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு இடமளிக்க முடியாது. வடக்கு , தெற்கு, கிழக்கு என்று வேறுபாடின்றி அனைத்து இன மக்களையும் நாங்கள் ஒருமித்தே பார்க்கிறோம். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்.
வழக்குத் தொடுநர் அலுவலகம் பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்ட ஒருசில விடயங்களை ஏற்றுக்கொள்கிறோம். இந்த அலுவலகம் இந்த நாட்டில் இடம்பெற்ற சகல குற்றங்கள் குறித்தும் ஆராயும்.இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி விரிவாக கலந்துரையாடலாம் என்றார்.
நன்றி – வீரகேசரி
