திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
இவரும் இவரது மனைவியும் திருகோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாடகை அடிப்படையில் பல வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
குறித்த வீடியோ மற்றும் அது தொடர்பான தகவல் ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரவிய நிலையில், இந்தச் சந்தேகநபர் திருக்கோவில் பிரதேசத்தில் கடலை விற்பனையாளர் என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவியுள்ளது.
அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் வசித்த இடங்கள் பலவற்றிற்குச் சென்று தேடுதல் நடத்தப்பட்டது.
அப்போது ஒரு இடத்தில் சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் தேசிய அடையாள அட்டைகளின் நிழற்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், அவரது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், குறித்த சந்தேகநபர் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, அவர் நடமாடக்கூடிய இடங்கள் குறித்து மேற்கொண்ட தேடுதலின் போது, சந்தேகநபர் இன்று மாலை கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது அவர் தலையை மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
.
