வி.ரி. சகாதேவராஜா
ஆம்.கிழக்கில் தீப்பள்ளயம் என்றால் பட்டி தொட்டி எல்லாம் பறையொலி முழங்க சக்தி மயமாகும்.
அந்த தீப்பள்ளயம் கல்முனையை அடுத்துள்ள பாண்டிருப்பு எனும் பழந்தமிழ் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறுவது வழக்கம்.
இவ் வருடத்திற்கான தீமிதிப்பு வைபவம் இன்று (10) வெள்ளிக்கிழமை மாலை பக்தி பூர்வமாக இடம்பெறும்.
ஆம், மகாபாரத இதிகாசத்துடன் தொடர்புடைய கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு மஹோற்சவம் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இலங்கையில் முதன் முதலில் உருவான திரௌபதி அம்மன் கோயில் இதுவாகும். இலங்கையில் அதிகூடிய 18 முழ நீளமான தீக்குழி இங்கு தான் உள்ளது. அங்கு பக்திப் பரவசத்துடன் பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்கள் கிருஷ்ணர் குந்தி தேவி மற்றும் அனுமதிக்கப்பட்ட விரதம் நோற்ற தேவாதிகள் மாத்திரம் தீமிதிப்பில் ஈடுபடுவார்கள்.
இவ் உற்சவம் மகாபாரத போரை நினைவு கூரும் முகமாக தொடர்ந்து 18 நாட்கள் நடைபெற்று வந்தது. நாளை 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை பாற்பள்ளயம், தருமருக்கு முடி சூட்டுதல் தீக்குழிக்கு பால்வார்க்கும் நிகழ்வு இடம்பெற்று அன்று இரவு 7 மணிக்கு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திரௌபதை அம்மன் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அம்மன் முத்துச் சப்புறத்தில் எழுந்தருளி ஊர்வலம செல்லும் நிகழ்வுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளது.
வரலாறு!
இலங்கையிலே முதன் முதலில் திரௌபதை அம்மனுக்கென ஆலயம் அமையப்பெற்றது பக்தி மணம் கமளும் பாண்டிருப்பிலேயாகும். இவ் ஆலயத்தின் வரலாறு மிகத் தொன்மையானதாகும். வட இந்தியாவில் இருந்து வைஷ்ணவ மதத்தை பரப்பும் நோக்கோடும், மகாபாரத இதிகாசத்தை மக்கள் மத்தியில் நடித்துக்காண்பிக்கும் நோக்கோடும் தாதன் என்னும் மாமுனியும், அவனது ஆட்களும் கடல்வழியே பிரயாணம் செய்து மட்டக்களப்பு பகுதியை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து அந்நாளில் நாகர் முனை என அழைக்கப்பட்ட திருக்கோயிலை சென்றடைந்து அங்கேயே தங்கியிருந்து மகாபாரத இதிகாசக் கதையினை மக்கள் மத்தியில் போதித்துவந்தனர்
வட இந்தியாவில் இருந்துவந்த தாதன் என்பவன் இங்கு வந்திருப்பதனை ஒற்றன் மூலம் அறிந்து கொண்ட அப்போது மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இருந்த மாருதசேனனுடைய புத்திரன் எதிர்மன்ன சிங்கன் (கி.பி.1539-கி.பி.1583) தாதனைக்கண்டு அவனது வருகை, குலம், நோக்கம், கோத்திரம், நாடுஎன்பவற்றை விசாரித்திருந்தான்.
தாதனும், தான் வருகை தந்த நோக்கத்தை மன்னனிடம் தெரிவித்து அதற்கேற்ற உகந்த இடம் ஒன்றை தேடி வழங்குமாறு மன்னனிடம் கேட்டுக்கொண்டான். மன்னனும் தானின் விருப்பப்படியே கடல் வழியே பிரயாணம் மேற்கொண்டபோது அருகே கடலும், ஆலவிருட்சங்களும், கொக்கட்டிமரங்களும் மேற்கே வனப்பகுதியும் காணப்பட்ட பாண்டிருப்பைக் கண்டு அங்கேயே தாம் கையோடு கொண்டுவந்திருந்த திரௌபதை, விஸ்ணு, பாண்டவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வணங்கிவந்தான். மன்னனும் தாதனின் வழிபாட்டு முறைக்கு பூரண ஆதரவை தெரிவித்தான்.
அக்காலத்தில் திரௌபதை அம்மன் ஆலயத்தின் மகிமையை கேள்வியுற்ற கண்டி மாநகரை ஆட்சிபுரிந்த அரசனான விமலதர்ம சூரியன் (கி.பி.1594 –கி.பி.1604)இல் இங்குவந்து அம்மனை தரிசித்துவிட்டு சென்றதாகவும், இவ்வாலயத்திற்காக தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை பரிசாக அளித்துச் சென்றுள்ளான் என கல்வெட்டுக்களில் இருந்த அறியக்கிடக்கின்றது.
இந் நிகழ்விற்கு நாட்டின் நாலாபாகங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் பாண்டிருப்புக்கு வருகை தருவது வழக்கம். இதனையிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ் வருட மகோற்சவம் சிறக்க வாழ்த்துக்கள்.
வித்தகர் விபுலமாமணி
வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு நிருபர்










