ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ ஏன் கலக்கமடைய வேண்டும். கலக்கமடைய வேண்டாம், பதற வேண்டாம் உண்மை வெளிவரும் என்று நாமல் ராஜபக்ஷவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் வியாழக்கிழமை (2) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் இடையில் தொடர்புண்டு கடந்த காலங்களில் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து தற்போது முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே நாமல் ராஜபக்ஷ கலக்கமடைய தேவையில்லை என்று அவரிடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நல்ல அபிலாசை காணப்படுகிறது. ஊழல்வாதிகள் மற்றும் படுகொலையாளிகள் தான் அச்சமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

குறைப்பாடுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்தற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். மக்களுக்கு எதிரான எவ்வித அடக்குமுறைகளையும் அரசாங்கம் செய்யவில்லை. சட்டத்தை கடுமையாக செயற்படுத்தும் போது ஊழல்வாதிகள் அதனை அடக்குமுறை என்று குறிப்பிடுவதை பெரிதுப்படுத்த போவதில்லை என்றார்.

நன்றி – வீரகேசரி