‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல்

பாறுக் ஷிஹான்

கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் திங்கட்கிழமை  (01) மாலை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.

‘சரோஜா’ என்ற தொனிப் பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர்  சிறுமியர் தொடர்பாக நடைபெற்ற  விஷேட கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் கலந்த கொண்டார்.

நிகழ்வில் முதலில் அனைத்து மத ஆராதனை இடம்பெற்றதுடன் வரவேற்புரை மற்றும் விடயம் தொடர்பான விளக்கவுரைகளை கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியுமான   ஏ.எல்.ஏ வாஹிட் மெற்கொண்டார்.

அதனை தொடர்ந்த பிரதம அதிதி உரை இடம்பெற்றதுடன் பிராந்தியத்திலுள்ள  பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமிகள் தொடர்பான தகவல்களை பெற்று கொள்வது சம்பந்தமான படிவத்திணை வழங்கும் நிகழ்வும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த  விடயம்சார் உத்தியோகத்தர்களின் கருத்து மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.

இதன்போது தற்போது  கிராமங்களில் இடம்பெறும்   திருட்டுச் சம்பவங்கள்  போதைபொருள் பாவனை,விற்பனை, மற்றும் சமூக சீர்கேடு தொடர்பான விடயங்கள், இதனை தடுப்பதற்கான வழிமுறைகள்  தொடர்பான விழிப்புணர்வை  ஏற்படுத்துதல்,பொது மக்கள் பாதுகாப்பு குழுவில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அங்கத்தவர்கள் அறிமுகம்,   கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி மாணவிகள் வீதி போக்குவரத்து பிரச்சினை , பிரதேச சமூக பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம்,   சிவில் குற்றங்கள், முரண்பாடுகள், குடும்ப பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையடப்பட்டன.

சமூக பாதுகாப்பு நிறுவனமான குடும்பம், பாடசாலை, சமய நிறுவனம், சமூக அமைப்பு நிறுவனத்தின் வகிபாகம், ஏதிர்காலத்தில் சமூகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு இடையிலான சமூக இடைவினையை அதிகரித்தல், பாடசாலை மாணவ, மாணவிகள் ஒழுக்கம், வீதி போக்குவரத்து விதி முறைகள் தெளிவுபடுத்தல், சமூக பாதுகாப்பினை மேன்படுத்துவதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், சமூக சேவை திட்டங்கள், பொது சிரமதான பணிகள் நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் குழு அங்கத்தவர்கள் ஆலோசனைகள் கருத்துக்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் கேட்டறிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

‘சரோஜா’ எனும் பொலிஸ்  திட்டத்தின் கலந்துரையாடல் கிழங்கு மாகாணத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர  ஆலோசனையில் முன்னெடுக்கப்படுவதுடன் இத்திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் ஆலோசனைக்கு அமைய  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.