கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (02) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், மாநகர சபையின் உள்ளுராட்சி உத்தியோகத்தர்
தாரிக் அலி சர்ஜுன், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நெளசாட், களஞ்சியப் பொறுப்பாளர் என். மகேந்திரராசா, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வஜீ உட்பட சுகாதாரப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற சுமார் 80 சுகாதாரத் தொழிலாளர்களுக்கு தலா இரண்டு வீதம் புதிய சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்முனை மாநகர சபை தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்ற சூழ்நிலைக்கு மத்தியிலும் ஊழியர்களுக்கு கால தாமதமின்றி உரிய தினத்தில் சம்பளம் வழங்குவதிலும் சீருடை போன்ற சலுகைகளை வழங்குவதிலும் மாநகர சபை நிர்வாகமானது கூடிய கரிசனையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மாநகர சபைக்கு உரித்தான வருமானங்களை பொது மக்களிடம் இருந்து சேகரிக்கின்ற விடயத்தில் திண்மக்கழிவகற்றல் சேவையானது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயமாக காணப்படுகிறது.
இந்நிலையில், திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற சுகாதாரத் தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.








