பாறுக் ஷிஹான்
தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்-
அப்துல் அஸீஸ் இணைப்பதிகாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் என்பவற்றின் அடிப்படையில் 2020 ஜனவரி முதல் 2023 மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் இலங்கை பொலிசாருடன் தொடர்புபட்ட தடுப்புக் காவல் மரணங்கள் 49 அவதானிக்கப்படடுள்ளன.
பொலிஸ் பாதுகாப்பில் (custody) உள்ளவர்கள் மற்றும் பொலிசாருடனான மோதல்களின் போது ஏற்பட்ட மரணங்களை தடுப்பது (Encounter deaths) தொடர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை பொலிசாருடனான 2025ம் ஆண்டின் முதலாம் இலக்க பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும் வெளியிட்டுள்ளதால் அது பற்றி அனைவர்களும் அறிந்து கொள்வது அவசியமாகும் என அப்துல் அஸீஸ், இணைப்பதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தெரிவித்தார்.
சர்வதேச சித்திரவதைகளுக்கெதிரான தினத்தையொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பொலிஸ் மற்றும் அரச,அரசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று(1) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அங்கு கருத்துத் தெரிவித்த அவர்.
இலங்கை அரசியல் அமைப்பின் 13(4) ஆம் உறுப்புரையில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமை இலங்கையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் உரித்தான ஓர் உள்ளார்ந்த உரிமையாகும். கைது செய்யப்பட முன்னரும் கைது செய்யப்படுகின்ற போதும் கைது செய்யப்பட்ட பின்னருமான பாதுகாப்பு ஒரு தனி மனிதனுக்கு இருக்கிறது.
அத்துடன் சந்தேக நபரான பெண் ஒருவரை திட்டமிட்டு கைது செய்கின்ற போது பொலிஸ் அலுவலர்களின் அணியில் ஒரு பெண் உத்தியோகத்தர் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுடன் புலனாய்வுத் தகவல்கள் தொடர்பாக அதிகூடிய இரகசியத் தன்மையை பேணுவது தொடர்பில் உத்தரவாதமளித்தல் வேண்டும்.
ஒரு கைதி தடுப்புக்காவலில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் மரணம் ஒன்று சம்பவித்தால் மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பாக கருத்திற் கொள்ளாமல் அந்நிகழ்விடத்தில் பூரண விசாரணை நடாத்தப்பட்டு அவ்விசாரணை முடியும் வரை மரண நிகழ்விடம் ஒரு குற்றவியல் தளமாக கருதப்படல் வேண்டும் இது பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
அனைத்து பொலிஸ் அலுவலர்களும் இவ்வழிகாட்டல்களை அமுலாக்கம் செய்வது தொடர்பான பயிற்சிகளை வழங்குதல். அவை இலங்கை பொலிசாரின் பயிற்சிகள் பாடத்திட்டத்தின் தராதரங்களுக்கேற்ப ஒருங்கிணைக்கப்படல் வேண்டும்.
அனைத்து பொலிஸ் அலுவலர்களுக்கும் கட்டாயமானதுமான வழக்கமானதுமான ஆயுதங்களை கையாளும் பயிற்சிகளை வழங்குதல்.அனைத்து பொலிஸ் அலுவலர்களுக்கும் முதலுதவி தொடர்பான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் வழங்குதல் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடிய ஒரு நபரின் மனோநிலையினை விரைவில் அகற்றுவதற்கான ஆற்றலையும் அறிவையும் அனைத்து பொலிஸ் அலுவலர்களுக்கும் வழங்குதல் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவர்களின் கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டு தேவைப்படுமிடத்து கருத்துரை வழங்கல் உள்ளிட்ட உளவியல் சமூக ஆதரவை வழங்குதல்.பொலிஸ் நிலையங்களினதும் அதிகாரமளிக்கப்பட்ட தடுப்புக்காவல் நிலையங்களினதும் விசாரணக்கூடங்கள், மறியல் கூடங்கள், நடமாடும் தாழ்வாரங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு கண்காணிப்பு கமெரா முறைமைகளைப் பொருத்துவதற்கும் பதிவு வைத்திருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
























