பொருளாதார உயர்ச்சியை காண்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்! பாண்டிருப்பில் பொதியிடும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் ; மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் தெரிவிப்பு

(அரவி வேதநாயகம்)

பொருளாதாரத்தில் உயர்ச்சியை காண்பதாயின் தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு 1C மாதர் கிராம அவிருத்தி சங்கத்திற்கு பொதியிடும் இயந்திரம் ஒன்றை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று (07) பாண்டிருப்பு 1C கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தொழில் முயற்சியாளர்களை உருவாக்குகின்ற தேசிய வேலை திட்டத்தில் தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை தனது சேவையை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு பக்க பலமாக சமுர்த்தி அதிகார சபை, திறன் அபிவிருத்தி பிரிவு போன்றவையும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவற்றின் சேவைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுகின்ற பொழுது தேசிய ரீதியிலே நாமும் சிறந்த தொழில் முயற்சியாளர்களாக உருவாக முடியும்.

ஆர்வமுள்ளோருக்கு தொடர்ந்து சேவைகளை வழங்க நாம் காத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் தான் குறிப்பிட்ட தகைமைகளை பூர்த்தி செய்த “ஆகாரா” உணவு உற்பத்திகளை வழங்குகின்ற பாண்டிருப்பு 1C கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு இந்த பொதியிடும் இயந்திரம் தேசிய தொழில் முயற்சி அதிகார சபையினால் வழங்கி வைக்கப்படுகின்றது.

இந்த வேளையில் இத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து வழிநடத்துகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர் எஸ்.ஸ்ரீநாதன், தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் ஜனாபா. ஸினோஸ் அதன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.நிஜந்தன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.சிவனேசன் மற்றும் பாண்டிருப்பு 1சி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் ரூபா 8 லட்சம் பெறுமதியான பொதியிடும் இயந்திரம் பாண்டிருப்பு 1C மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.