SAMSUNG DIGITAL CAMERA

கத்தாரின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றான ராஸ் லஃப்பான் பகுதியில் ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
தோஹா நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள ராஸ் லஃப்பான், உலகளவில் மிகப்பெரிய LNG (இயற்கை எரிவாயு திரவம்) ஏற்றுமதி மையங்களில் ஒன்றாகும். இந்த மையம் மூலம் பல நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் நடைபெறுவதால், தாக்குதல் உலக எரிசக்தி சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
புதன்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் தாக்குதல் நடைபெற்றதாகவும், அதன் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் கத்தார் உள்துறை அமைச்சகம் மற்றும் அவசர மீட்புக் குழுக்கள் விரைவாக செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்றும், அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முன்பு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் உள்ள எண்ணெய் வசதிகள் மீது தாக்குதல் நடத்தலாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமையை முன்னிட்டு, உலகின் முக்கிய LNG ஏற்றுமதி மையமான ராஸ் லஃப்பானிலிருந்து பணியாளர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.