இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள்

2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தன.

10 தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 272 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானார்கள்.

இதேவேளை ஐந்து ஆண்டுகளாக புலனாய்வாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை உட்பட்ட இலங்கை குற்றவியல் சட்டக் கட்டமைப்புக்கு தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை கைது செய்ய முடியவில்லை.

பாதுகாப்புத் தரப்புக்கு சாட்சியமளிக்காமலேயே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோர், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல் இடம்பெற்று இன்று 5 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தாக்குல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்ம சாந்தி வேண்டி விசேட ஆராதனைகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன.

மேலும், கொழும்பு மறை மாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களிலும் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்றையதினம் நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You missed