அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர் இணைந்து சாதனையாளர்கள் பாராட்டு விழா….

-ம.கிரிசாந்-

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம், இந்து இளைஞர் மன்றத்தினரால் சாதனையாளர்கள் பாராட்டு விழா மற்றும் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு என்பன நேற்றயதினம் (27) மாலை 3.30 மணியளவில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ், திருக்கோவில் நீர்ப்பாசன பொறியியலாளர் P.விகர்ணன் மற்றும் ஜெய் வைத்தியசாலை ஸ்தாபகர் வைத்தியர் சித்திரா என்பவர்கள் பாராட்டப்பட்டிருந்தனர் மேலும் இந்துசமய கலாசார அலுவலர்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்துசமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் சித்திரப்போட்டியில் முதலிடம் பெற்ற எமது ஆலையடிவேம்பு பிரதேச த.மெருஜன் அவர்களும் பாராட்டப்பட்டிருந்தார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பல அதிதிகள் விருந்தினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்களின் உருவப்படத்தினை இந்துசமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் சித்திரப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவன் த.மெருஜன் வரைந்து அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்களுக்கு குறித்த நிகழ்வில் வழங்கி வைத்திருந்தமையும் சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது.