காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சொல்லி தற்போது காணொளி ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், அதன் உண்மைத் தன்மை தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் வரவேண்டும், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் ஆகியோர் மீண்டும் வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

காரணம், தற்போது தமிழர் பகுதியில் அதிகரித்துள்ள பௌத்தமயமாக்கலும், காணி அபகரிப்பும், இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பும் தான்.

இவ்வாறான நிலையில்தான் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த மக்களினுடைய உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு போலியான நடவடிக்கைகளிலே சில குழுக்கள் ஈடுபடுகின்றன.

அதன் பின்னணியில் தான் தற்போது துவாரகா உரையாற்றுவது போன்றதொரு காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் பிரபாகரனின் மகளாக இருந்தால் அவருடை உடையின் நிறம் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டிருக்கும்.

அத்துடன் வெளிவந்துள்ள காணொளியில் மொழி வேறுபட்டிருக்கின்றது. சொற்கள் வித்தியாசமாக இருக்கின்றது. ஆகவே இது இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இதன் பின்னணியில் இந்தியா இருக்கின்றது என்பது உறுதி செய்யப்படுவதுடன் இதற்கான பொறுப்பை இந்தியா சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.