கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு  மாவீரர் துயிலும் இல்லம் அருகே  மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது.

நினைவேந்தலைத் தடைசெய்யும் பொலிசாரின் இறுதி முயற்சி  முறியடிக்கப்பட்டு  அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டபடி கடும் மழைக்கும் மத்தியில் கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்தின் அருகில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

என்றுமில்லாதவாறு   அதிகளவான பொலிஸார்  குவிக்கப்பட்டிருந்தனர் . அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொலிஸாரின் வாகனங்களை காணக்கூடியதாக இருந்தது.

கஞ்சிகுடிச்சாறு  மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடமானது அரச காணி என்பதால் அஞ்சலி செலுத்த வந்தவர்களை  பொலிஸார்  உள்  நுழைய அனுமதிக்கவில்லை .

இதன் போது அப்பகுதியில் இருந்த பொலிஸாருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்தின் அருகில்  பொலிஸாரின்  அடக்கு முறைகளுக்கு மத்தியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்று  தங்களுடைய உறவுகளை சுடர் ஏற்றி  நினைவு கூர்ந்தனர்.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கவீந்திரன் கோடீஸ்வரன் குழுவினரையும்  பொலிஸார்  உள்  நுழைய அனுமதிக்கவில்லை.  இதனை தொடர்ந்து துயிலும் இல்லம் அமைந்துள்ள காணிக்கு முன்பாக  அஞ்சலி செலுத்தப்பட்டது .  

நிகழ்வு நடைபெற்ற பிரதேசத்தில் அதிகளவு பொலிசார் , கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என்பன முன்னெச்சரிக்கையாக தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இது தவிர குறித்த நினைவேந்தலுக்கான கல்முனை பகுதியில் இருந்து பஸ் வண்டியில் வருகை தந்த மக்கள் அக்கரைப்பற்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும்  அடக்கு முறைகளுக்கு  அடி பணியாது தமிழ் மக்களின் நினைவு கூறும் உரிமை தற்போது  நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் எமது மக்களின் உரிமையை மதிக்காத வரை எவ்விதத்திலும் இணக்கப்பாடு ஏற்படாது என்றதுடன் பொலிஸாரது  அச்சுறுத்தல்களை கடந்து   சுடரேற்றுவதற்கான  முயற்சியினை எமது மக்கள் மேற்கொண்டிருந்தமை வரலாற்று பதிவாகும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

You missed