நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் -தீர்ப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக குறித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகலா, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் ராஜபக்சக்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட குழுவினால் மக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த போதே ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில்,கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலதிபர்களுக்கு 681 பில்லியன் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதுவே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பிரச்சினை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியின் போது 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பொருளாதார தவறான நிர்வாகப் பிரச்சினைகளையுமட மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை மனுதாரர்களுக்கு தலா 150ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.