ஊடகப்பிரிவு – மட்டக்களப்பு

அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!!

அப்பாவி பொது மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகுமென வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் கீழான வைத்தியசாலைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு சம்பந்தமான மாவட்ட மட்ட போட்டியொன்றை ஒழுங்குபடுத்தி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வொன்று அண்மையில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான்கு ஆதார வைத்தியசாலைகளும் 10 பிரதேச வைத்தியசாலைகளும் பங்குபற்றியிருந்த இப்போட்டியில் 1,2,3 இடங்களைப்பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்குமான பரிசில்களை இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மளின்டன் கொஸ்தா வழங்கி வைத்துள்ளார்.

இந்த போட்டியின் நடுவர்களாக வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன், வைத்தியகலாநிதி மயூரன் நாகலிங்கம், வைத்தியர் தயாலினி சசிகுமார், ஆகியோர் பங்களிப்பு செய்திருந்தார்கள்.

நோயாளிகளின் பாதுகாப்பு சுகாதார திணைக்களத்தை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அந்தவகையில் எம்மால் முடிந்த பங்களிப்பை நாம் எமது வைத்தியசாலைகளில் உறுதிப்படுத்தவேண்டியதும் அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியதும் கடமையாகுமென இந்நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இங்கு உரையாற்றும் போது தமது உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.