தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினைக் காட்டவேண்டும் என்றும் அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமான அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு முன்னாள் எம்.பியான பா.அரியநேத்திரனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு முன்னாள் எம்.பியான ஞா.சிறிநேசனால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி தலைவர் திவாகரன் மற்றும் முன்னாள் தவிசாளர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள்,வலிப முன்னணி உறுப்பினாகள் என பலர் கலந்துகொண்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பா.அரியநேத்திரன், “2010ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக்கட்சி இந்த நிகழ்வினை செய்துவருகின்றது.

திலீபன் மருத்துவ பீட மாணவனாகயிருந்து தமிழர்களின் விடுதலைக்காக புலிகளுடன் இணைந்துகொண்டார். 21வயதில் இயக்கத்தில் இணைந்த அவரின் திறமையினைக்கண்ட தலைவர் அவரை யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்தார்.

1987ஆம் ஆண்டு அமைதிப்படையென்ற தோரணையில் இந்திய இராணுவம் கால்பதித்த நிலையில் பல அநியாயங்களை செய்தபோது அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியடைந்த நிலையில் அகிம்சை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவானது அகிம்சையால் விடுதலை பெற்ற நாடு, காந்திய அகிம்சைபேசும் நாடு என்ற அடிப்படையில் அகிம்சை போராட்டம் நடைபெறும்போது அதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே திலீபன் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

ஆனால் இந்திய அந்த அகிம்சை போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக 12வது நாளில் திலீபன் உயிர்நீர்த்தார்.

உலக வரலாற்றில் 23வயது இளைஞன் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் நடாத்தி உயிர்நீத்த சம்பவம் ஈழத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அதேபோன்றுதான் இந்திய படைக்கு எதிராக 1989ஆம் ஆண்டு 54வயதுடைய தாய் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்ததும் வரலாறாகும்.இந்த இரண்டும் இந்திய இராணுவம் இங்கு கால்பதித்தமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.

13ஆவது அரசியலமைப்பு தொடர்பாக நாங்கள் இன்று பேசிக் கொண்டிருக்கின்றோம். 36 வருடங்களுக்கு பின்னர் நாங்கள் மீண்டும் அதனை சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் திலீபனின் கோரிக்கைகளுக்கு அப்பால் இந்த 13வது திருத்ததிற்கு அப்பாலான தீர்வினை வழங்குவதற்கான அழுத்தங்களை வழங்குவதிலிருந்து இந்திய அரசாங்கம் தவறிவருகின்றது.

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதையே இலங்கை தமிழரசுக்கட்சி இன்றும் வலியுறுத்திவருகின்றது” என்றார்.