ராஜபக்சக்களின் வெற்றிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – ஆசாத் மௌலானா

2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) முன்னாள் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானா குற்றச்சாட்டியுள்ளார்.

குறித்த சந்திப்பு கிழக்கில் இடம்பெற்றதாகவும், அதில் தானும் கலந்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட செனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தில் அவர் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மௌலானா குற்றச்சாட்டினார்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள் 2019 ஏப்ரல் 21 அன்று மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பல சொகுசு ஹோட்டல்களில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

இதில் 270 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்ததாக மௌலானா குற்றச்சாட்டினார்.

எனவே ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலே குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

நன்றி -சிலோன் ஸ்ரீ