கல்முனை மாநகர வீதிகளில் பொருட்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை

(ஏயெஸ் மெளலானா)
கல்முனை மாநகர வீதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக விளம்பரப் பதாகைகள் மற்றும் வியாபாரப் பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
கல்முனை- அக்கரைப்பற்று, கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பிரதான வீதியோரங்களில் வர்த்தக நிலையங்களின் விற்பனைப் பொருட்களும் அவற்றின் பெயர்ப் பலகைகள் மற்றும் விளம்பரப் பதாகைகளும் பெருமளவில் காட்சிப்படுத்தப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இவை நடைபாதைகளையும் வடிகான்களையும் ஆக்கிரமித்திருப்பது மாத்திரமல்லாமல் அவற்றையும் தாண்டி வீதிகளில் கூட பொருட்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
அனுமதிக்கப்படாத தெருவோர அங்காடி வியாபாரங்களும் நடைபெறுகின்றன. அத்துடன் வீதிகளில் வாகனங்களை நீண்ட நேரம் தரித்து வைப்பதும் நடமாடும் வியாபார வாகனங்களை நிறுத்தி வைத்து வியாபாரம் மேற்கொள்வதும் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் வீதிகளில் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் சம்பவிக்கின்றன. இதனால் வீதியோரமாக பாதசாரிகள் நடந்து செல்வதற்குக் கூட இடமின்றி அசெளகரியங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான இடையூறுகள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் வீதிகளை ஒழுங்குபடுத்தி, அழகுபடுத்தும் நோக்கிலும் மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து உரிய நடவடிக்கை எடுப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கணக்காளர் கே.எம்.றியாஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மீர், மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்து சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வருமான பரிசோதகர்கள், சுகாதாரப் பிரிவு மேற்பார்வையாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.