2023 ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு வழங்கிய இலக்குக்கு இணங்க கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன.

இந்த கட்டுப்பாடுகளை நாங்கள் காலவரையின்றி வைத்திருக்க முடியாது என்று அந்த அதிகாரி கூறியதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.  

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 1.6 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது என்று குறிப்பிட்டார். இது ஒரு வருடத்திற்கு முன்பு வெறும் 200 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.  

படிப்படியான பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களால் கட்டியெழுப்பும் இலக்கை ஐஆகு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை தளர்த்துவது, வெளிநாட்டு கையிருப்பில் ஏற்படும் சேதம் காரணமாக இன்னும் சாத்தியமில்லை என்று கூறினார்.  

தற்போதைக்கு, நமது வெளிநாட்டு கையிருப்புக்கு மிகக் குறைந்த அளவு சேதத்தை ஏற்படுத்தும் பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை மட்டுமே நாங்கள் நீக்குவோம். இந்த காரணத்திற்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்க மாட்டோம். நாங்கள் வாகன இறக்குமதியை மறுதொடக்கம் செய்தவுடன், நமது வெளிநாட்டு கையிருப்பில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தடை இன்னும் நடைமுறையில் இருப்பதால், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் மிகப்பெரிய சுமை பெருந்தெருக்கள் மேம்பாட்டு திட்டங்களால் வருகிறது.  

இந்த சூழ்நிலையில், திறைசேரி அத்தகைய திட்டங்களில் மிகவும் அத்தியாவசியமானவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் குறைந்தபட்சம் டிசம்பர் வரை நிறுத்தி வைத்துள்ளது.மேலும், 10 பில்லியனுக்கும் மேலான அனைத்து திட்டங்களும் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.  

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் கடன் மறுசீரமைப்பு முடிவடையும் வரையும் அரசாங்கம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதற்கான தெளிவு பெறும் வரையும், எதிர்கால வேலைத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று திறைசேரி அதிகாரி தெரிவித்துள்ளார்.