பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு (21) முதல் குறைக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படவுள்ளது.

இன்று (20) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை ‘குறித்துரைக்கப்பட்ட பண்டம்’ (Specified Goods) ஆக அறிவித்து, வர்த்தக வாணிப அமைச்சர் நளின் பண்டாரவினால் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த பின்னணியில் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படாவிட்டாலும் ஏனைய பொருட்களின் விலைகள் குறைக்கப்படாத காரணத்தினால் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இருப்பினும், சங்கத்தின் குறித்த அறிவிப்பு தொடர்பில், வர்த்தக அமைச்சர், நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்திருந்தது. 

இந்நிலையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You missed