கல்முனையில் மோட்டர்சைக்கிளை திருடிக் கொண்டு மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சங்கிலி அறுத்துச் சென்ற திருடர்கள் தொடர்பாக பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிசார்  

(கனகராசா சரவணன்)

கல்முனையில் மோட்டர்சைக்கிள்  திருடிக் கொண்டு அந்த மோட்டர்சைக்கிளில் மட்டக்களப்பு நகர்பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்ட திருட்டு சம்பவம் மற்றும் மட்டக்களப்பில் மோட்டர்சைக்கிளை திருடிக் கொண்டு கிரான்குளத்தில் வீதியால் சென்ற ஒருவரின் பணத்தை பறித்துச் சென்று திருட்டுச் சம்பவங்கள் திங்கட்கிழமை (13) பகல் இடம்பெற்றுள்ளதுதாகவும் இந்த திருடர்கள் தொடர்பான தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்முனையில் நிறுத்திவைத்திருந்த பல்சர் ரக மோட்டர்சைக்கிள் ஒன்றை சம்பவதினமான திங்கட்கிழமை காலை 9.15 மணியவில் இருவர் திருடிக் கொண்டு அந்த மோட்டர்சைக்கிளில் பிரயாணித்து 10.45 மணியளவில் மட்டக்களப்பு அரசடி பகுதியில் வீதியால் தனிமையாக சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து 2 பவுண் தங்கசங்கிலிலை அறுத்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு நகர் றொசாரியே வீதியில் வீடு ஒன்றின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து அரசாங்கத்தால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டர் சைக்கிளை சம்பவதினமான சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் இருவர் திருடிக் கொண்டு அந்த மோட்டர்சைக்கிளில்; கிரான்குளம் பிரதேசத்தில்   இரவு 11மணிக்கு வீதியால் சென்ற ஒருவரை வழிமறித்து தாங்கள் சிஜடி என தெரிவித்து அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துக் கொண்ட கொள்ளையர்கள்; களுவாஞ்சிக்குடி நகர்பகுதியில் வீதியில் திருடிச் சென்ற மோட்டர் சைக்கிளை கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர் .

இதனையடுத்து மோட்டர்சைக்கிளை மீட்டுள்ளதுடன் இந்த இரு வெவ்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவர்கள் சீசிரி கமராவில் பதிவாகியுள்ளதுடன் இவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் மட்டு தலைமையக பொலிசாருக்கு அறியதருமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.