இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் தற்போதுள்ள உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் அணி ஒன்றை, இலங்கை, ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது.

ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் வளர்ந்து வரும் அணி ஒன்று, 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் என்று சிறிலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை வளர்ந்து வரும் அணி ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து 20க்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஜப்பான் தேசிய கிரிக்கெட்

இந்தப்போட்டிகள், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்களுக்கான 20க்கு 20 உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.

அத்துடன் ஜூலை 2023 இல் நடைபெறும் கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்திய இறுதிப் போட்டியில் பங்கேற்கத் தேவையான தயாரிப்புகளுக்கு தமது அணியைத் தயார்ப்படுத்தும் என்று ஜப்பான் கிரிக்கெட் சங்கம் நம்புகிறது.

ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் இணை உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.