அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன வழமை போன்று செயற்படுவதாக அதன் பிரதானிகள் அறிவித்துள்ளனர்.

இலங்கை வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் சகல அலுவல்களும் வழமை போன்று நடைபெறுவதாக அதன் பொதுமுகாமையாளர் ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்றைய தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பின் மத்தியிலும், இலங்கை வங்கியின் 265 கிளைகளில் எந்தவொரு கிளையும் மூடப்படவோ அல்லது சேவைகளில் தடங்கல் ஏற்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழமை போன்று இயங்கும்

அதே ​போன்று மக்கள் வங்கியின் 340 கிளைகளில் இன்றைய தினம் 272 கிளைகள் வழமை போன்று இயங்குவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் 75 வீதமான ஊழியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளின் ஊழியர் சங்கப் பிரநிதிகள் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரம் அருகே ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.