இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட அமைச்சின் மனுதாரர் கோரிக்கை வைக்க முடியும் எனவும் நான்கு வாரத்தில் உரிய பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை அணுக முடியும் என்றும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை இடம்பெற்று வருவதாக இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

எனினும், ராமர் பாலம் தொடர்பில் மத்திய அரசு எவ்வித முடிவையும் தெரிவிக்கவில்லை என மீண்டும் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு செய்துள்ள நிலையில் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.