கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதி நாள் செவ்வாய்கிழமை பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்றைய தினம் வெருகல் முருகன் ஆலயத்திலிருந்து குறித்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் இணைந்து தமது ஆதரவை வழங்கினர்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி இறுதி நாள் நிகழ்வுக்கு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட மக்கள் மிகவும் அமோக ஆதரவு வழங்கியுள்ளர்.

இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெருகல் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமான பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது.

அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்.

இந்நிலையில் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் தொடர்ந்தும் ஈடுபட்டதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கதிரவெளி மக்களால் பேரணிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வெடி கொளுத்தி தேங்காய் உடைத்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கட்சி வேறுபாடுகள் மத வேறுபாடுகளுக்கு அப்பால் கிறிஸ்தவ இந்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பல பிரதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்ட வர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.